மருந்து கடையில் திருட்டு முயற்சி
மருந்து கடையில் திருட்டு முயற்சி நடந்தது.
உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் பி.மேட்டூர் கடைவீதியில் மருந்து (மெடிக்கல்) கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் சுரேஷ் வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பிரதான மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்த நிலையிலும், பின் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பக்க கதவு உள்புறமாக கம்பிகளை வைத்து அடைக்கப்பட்டிருந்ததால் அதனை உடைக்க முடியவில்லை. இதனால் கடையில் உள்ள பொருட்கள் -பணம் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.