போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொல்ல முயற்சி; 2 பேர் கைது
கூடங்குளம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற மினி லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பழவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பார்த்திபன். இவர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கூடங்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கூடங்குளம்-சண்முகாபுரம் சாலையில் ஒரு மினி லாரி வேகமாக வந்தது. இதை பார்த்த போலீசார், அந்த மினி லாரியை மறிக்க முயன்றனர். ஆனால், அது நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டிச் சென்று சிறிது தூரத்தில் மினி லாரியை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் மினி லாரியில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது, 2 பேரும் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சுதாரித்துக் கொண்டு நகர்ந்ததால் உயிர் தப்பினார். உடனே மற்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு, 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கூடங்குளம் அருகே உள்ள சண்முகாபுரத்தை சேர்ந்த சரவணன் (வயது 24), சிவஞானபுரத்தை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (25) என்பதும், அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததால் மினிலாரியை நிறுத்தாமல் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து சரவணன், மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மினி லாரி, 2 அரிவாள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.