நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி; 2 பேர் கைது
ஏர்வாடி அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வனத்துறையினர் ரோந்து
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில், வனத்துறையினர் ஏர்வாடி அருகே உள்ள பரிவரிசூரியன் பீட் கரும்பாறை சரகம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தனர்.
நாட்டு வெடிகுண்டுகள்
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் 2 பேரும் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சாமுவேல் மகன் சதீஷ் (வயது 42), ரமேஷ் மகன் ராகுல் (23) என்பது தெரியவந்தது.
மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் மறைத்து வைத்து வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து சதீஷ், ராகுல் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதுகுறித்து வனசரகர் யோகேஷ்வரன் கூறுகையில், 'வன உயிரினங்களை வேட்டையாடுவது, கறிகளை விற்பனை செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனத்தில் தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.