ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

வந்தவாசி அருகே ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-27 17:24 GMT

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 32), ஆராசூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார்.

இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி விஜயலட்சுமிக்கு (36) ஏலச்சீட்டு பணம் தர வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் வங்கியில் பெற்ற கடனுக்கு ராஜேந்திரன் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். அந்த கடனை மணிகண்டன் சரிவர கட்டவில்லை என தெரிகிறது.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமி 100 நாள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மணிகண்டன், அவரது தாய் அம்பிகா ஆகியோர் சேர்ந்து விஜயலட்சுமியை வழிமடக்கி, சீட்டு பணமும் தரமுடியாது, வங்கிக்கடனையும் கட்ட முடியாது என்று கூறி தகராறு செய்தனர்.

மேலும் இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் மணிகண்டன், அம்பிகா ஆகியோர் மீது வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்