பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்

நாசரேத் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update: 2022-07-29 13:34 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

பஞ்சாயத்து தலைவர்

சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தைச் சேர்ந்த மணிமுத்து மகன் சிவபெருமாள் (வயது 38). இவர் மீரான்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். மேலும், இவர் சுற்று வட்டார பகுதியில் உள்ள வாரச்சந்தைகளுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர் ஏரலில் காய்கறி வியாபாரத்தை முடித்துக் கொண்டு லோடுஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் அருகில் வந்தபோது, லோடு ஆட்டோவை 5 மர்ம நபர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

தாக்குதல்

அந்த 5 பேரும் ஆட்டோவில் இருந்த சிவபெருமாளிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த 5 பேரும், ஆட்டோவை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அந்த லோடு ஆட்டோவில் இருந்த காய்கறிகளை சாலையில் எடுத்து வீசியதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியவாறு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு 5 பேரும் தப்பி சென்று விட்டனராம். இதில் பலத்த காயமடைந்த சிவபெருமாள், சாத்தான்குளம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

5 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப் இன்ஸ்பெக்டர் சேது உசேன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவரை சிவபெருமாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள், மேலவெள்ளமடத்தை சேர்ந்த சங்கரன் மகன் துரை (எ) சின்னத்துரை, வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனி மகன்கள் சுந்தர், வெள்ளப்பாண்டி, சண்முகம் மகன் அம்மமுத்து, மேலவெள்ளமடத்தை சேர்ந்த பாபு மகன் முத்துக்குமார் ஆகியோர் என தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அந்த 5 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்