காதல் மனைவி மீது தாக்குதல்
காதல் மனைவியை தாக்கிய கணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சிவகாசி,
சாத்தூர் தாலுகாவில் உள்ள அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காவியா (வயது22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (27) என்பவருக்கும் கடந்த 6.7.2022 அன்று திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் கலப்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவன், மனைவி இருவரும் கோவையில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த காவியா தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் மனைவி மற்றும் குழந்தையை முத்துராஜ் பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் காவியா தனது தாய் வீட்டிலேயே இருந்து விட்டார். விவாகரத்து பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவியாவின் தாய் வீட்டிற்கு வந்த முத்துராஜ், அவரது தம்பி முத்துராஜேஷ்(22), உறவினர் விக்னேஷ் (22) ஆகியோர் காவியாவை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க வந்த காவியாவின் தாய், பாட்டியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவியா அம்மாபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் முத்துராஜ், முத்துராஜேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.