ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
செஞ்சி
செஞ்சி ஊராட்சி ஒன்றியம் கவரை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அய்யனார்(49). இவர் பா.ம.க. மாவட்ட துணை செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று மாலை ஊராட்சி மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன்(47), டேங்க் ஆபரேட்டர் ராஜா(37) ஆகியோருடன் கிராமத்தில் குடிநீர் குழாய் பாதிக்கும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 6 பேரை கொண்ட கும்பல் வாக்குவாதம் செய்து அய்யனார் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். இதனால் செஞ்சி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.