மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 5,430 பேருக்கு ஏ.டி.எம். கார்டு

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5,430 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-15 18:45 GMT

ராமநாதபுரம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5,430 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி தொடங்கி வைத்தார்.

உரிமைத்தொகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிருக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடானை ராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறவுள்ள மகளிருக்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கிட மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்துரிமை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கட்டணமில்லா பஸ் வசதி, அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். அந்த வகையில் ஒரே நாளில் 1 கோடியே 6 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 ரேஷன் கடைகள் மூலம் 3,18,048 குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிடும் வகையில் 5,430 பேருக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். கிடைக்காதவர்களுக்கு அதற்குரிய காரணம் குறுஞ்செய்தியாக வரும். மீண்டும் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பேசினார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பயிற்சி சப்-கலெக்டர் சிவானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், நகர்மன்ற தலைவர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், பரமக்குடி சேது கருணாநிதி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பகவத்சிங் சேதுபதி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகமது அசாருதீன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் குணசேகரன், தொண்டரணி அமைப்பாளர் பி.டி.ராஜா, மாவட்ட கவுன்சிலர் ராமவன்னி, அரசு வக்கீல் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்