ஏடிஎம் கொள்ளை சம்பவம்: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை
கியாஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், 4 ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையின் முக்கிய பகுதிகள், டோல்கேட் பகுதிகளில் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி, மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.