வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சென்னை வளசரவாக்கத்தில் 2 மர்மநபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.;
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 2 பேர் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்த அதிகாரிகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் சற்று உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.