சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை: கைதான கொள்ளையர்கள் பல்கேரியா நாட்டுக்கு அனுப்பி வைப்பு

சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய பல்கேரிய நாட்டு கொள்ளையர்கள் 3 பேரும் அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டனை காலத்தை அங்குள்ள சிறையில் கழிப்பார்கள்.;

Update: 2022-09-16 09:27 GMT

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஒரு கும்பல் நூதன முறையில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி, 'ஸ்கிம்மா் கருவி' உதவியுடன் பணத்தை கொள்ளையடித்தனா்.

இது தொடர்பாக சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசாா் பல்கேரியா நாட்டை சோ்ந்த நிக்கோலா, போரீஸ், லூம் போப்பி ஆகிய 3 கொள்ளையர்களை கைது செய்தனர். கொள்ளையர்கள் 3 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பல்கேரியா நாட்டு அரசு, இந்திய அரசிடம் பேசி தங்கள் நாட்டு கைதிகளை ஒப்படைக்கும்படியும், அவர்களுடைய தண்டனை காலத்தை தங்கள் நாட்டு சிறையில் கழிப்பார்கள் எனவும் கூறியது. அதற்கு இந்திய அரசும் அனுமதி அளித்தது.

இதையடுத்து பல்கேரிய நாட்டில் இருந்து சென்னை வந்த தனிப்படை போலீசார், முறைப்படி புழல் சிறை அதிகாரிகளிடமும், விமான நிலைய குடியுரிமை பிரிவு அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றனர். கொள்ளையர்கள் 3 பேருக்கும் அவசர கால சான்றுகள் வழங்கப்பட்டன.

பின்னர் புழல் சிறையில் இருந்த 3 பல்கேரிய நாட்டு கொள்ளையர்களும் பலத்த பாதுகாப்புடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தோகா செல்லும் விமானத்தில் கத்தார் நாட்டு வழியாக பல்கேரிய நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்