பட்டப்பகலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது - லட்சக்கணக்கான பணம் தப்பியது

பட்டப்பகலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் லட்சக்கணக்கான பணம் தப்பியது.;

Update:2023-04-30 13:05 IST

ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று அதிகாலை வாடிக்கையாளர் போல் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கதவை பாதியில் மூடிவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். வெளியில் அவரது உதவியாளர்கள் 2 பேர் யாராவது வருகிறார்களா என கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஏ.டி.எம் மையத்தில் உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து, ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.

போலீசார் வருவதை கண்டதும் வெளியில் நின்று கொண்டிருந்த 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஷெட்டரை தூக்கி உள்ளே பார்த்தபோது, உள்ளே ஏ.டி.எம். எந்திரத்தை ஒருவர் உடைத்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகரை சேர்ந்த எட்வின் (வயது 56) என்பதும், அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். மையத்தை நோட்டமிட்டு இரும்பு ஆயுதங்களை கோணிப்பையில் கொண்டுவந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கைது செய்யப்பட்ட எட்வின் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரோந்து போலீசார் சரியான நேரத்தில் கொள்ளையனை மடக்கி பிடித்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது. மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்