ஏ.டி.எம். மையங்களுக்கு இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
ஏ.டி.எம். மையங்களுக்கு இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.;
விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மேலாளர்களுக்கு வங்கி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கிகளின் முக்கிய கடமை. எனவே தங்களது வங்கிகளின் சார்பாக நிறுவப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும். அதனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஏ.டி.எம். மையத்திற்கு இரவு நேர பாதுகாப்பிற்காக காவலாளியை நியமிக்க வேண்டும்.
அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது தமிழக போலீசாரால் உருவாக்கப்பட்ட காவல் செயலியையோ பயன்படுத்துமாறு அறிவுரை வழங்க வேண்டும்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
வங்கிக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களில் யாரேனும் சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனடியாக அவர்களை பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், துணை சூப்பிரண்டுகள் வளவன், ஜனனி பிரியா மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.