அத்திப்பள்ளம் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா
விராலிமலை அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அத்திப்பள்ளம் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.;
மீன்பிடி திருவிழா
விராலிமலை தாலுகா அத்திப்பள்ளம் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக நீர் நிரம்பி இருந்தது. சுமார் ஒரு ஆண்டிற்கு மேலாக குளத்தில் நீர் வற்றாமல் இருந்ததால் அக்குளத்தில் சிறிய, பெரிய வகை மீன்கள் அதிகளவு இருந்து வந்தது. இந்நிலையில் குளத்தின் நீரானது தற்போது வற்றியதையடுத்து மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு மீன்பிடி திருவிழாவானது நடைபெறுவதால் அத்திப்பள்ளம், விராலிமலை, வானதிராயன்பட்டி, கோடாலிக்குடி, மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு திரண்டு வந்தனர்.
சமைத்து சாப்பிட்டனர்
இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசினர். இதைதொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். பின்னர் தாங்கள் பிடித்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.