தூத்துக்குடி கோட்ட தபால் நிலையங்களில்செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி கோட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.

Update: 2023-02-06 18:45 GMT

தூத்துக்குடி கோட்ட தபால் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

தமிழ்நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்களிலும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 10.02.2023 அன்று 7 லட்சத்து 50 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பலன்கள்

இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர், பாதுகாவலர் இந்த கணக்கை ரூ.250/- செலுத்தி அனைத்து தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்த பட்ச தொகை ரூ.250-ம், அதிக பட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையும் கணக்கில் செலுத்தலாம். அசலுடன் சேர்ந்து வட்டியும், அடுத்த வருட அசலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கணக்கில் செலுத்தும் தொகை, வட்டி, மற்றும் முதிர்வு தொகை என அனைத்திற்கும் பெற்றோருக்கு வருமான வரிவிலக்கு பெறலாம். செல்வமகள் சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை 10ம் வகுப்பு முடிந்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீதம் தொகையைப் பெறலாம். பெண் குழந்தையின் திருமணத்தின் போது முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.

எனவே சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி தங்களின் பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்