வேலை வாய்ப்பு முகாமில்317 பேருக்கு பணி நியமன ஆணை:கலெக்டர் வழங்கினார்
தேவதானப்பட்டியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 317 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) சார்பில், தேவதானப்பட்டி மேரி மாதா கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர். இதில் 2 ஆயிரத்து 658 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 317 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 250-க்கும் மேற்பட்டோர் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து தேர்வானவர்களுக்கு கலெக்டர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் கல்லூரி முதல்வர் ஐசக், மாவட்ட வேலை வாய்ப்பு துறை அலுவலர் நாராயணமூர்த்தி, நம் மகளிர் திட்டம் இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.