சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஒரேநாளில் 2 காதல் ஜோடி தஞ்சம்

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஒரேநாளில் 2 காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-12-13 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.

பெற்றோர் புகார்

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்த முத்துமாரி என்பவரும், கருங்கடலை சேர்ந்த சாத்தராக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி இருவரும் மாயமாகினர். இதுகுறித்து இருவரது குடும்பத்தினரும் போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்திருந்தனர்.

போலீசார் சமரசம்

சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர். தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கணவன், மனைவியாக வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் இருவரது குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர். பின்னர் காதல் தம்பதியர் தங்களது வீட்டுக்கு சென்றனர்.

மற்றொரு ஜோடி

இதேபோன்று பேய்குளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் சேர்மலட்சுமி ஆகியோரும் கடந்த 8-ந் தேதி மாயமாகினர். இதுகுறித்து இருவரது பெற்றோரின் புகார் அடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருவரும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது, இருவரும் காதலித்து வருவதாகவும், இதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை விட்டு வெளியேறி சென்றதாகவும் கூறினர். அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் மேஜர் என்றும், திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதை தொடர்ந்து இருவரது பெற்றோரையும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி முறையாக திருமணம் செய்து வாழுமாறு வாலிபரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்