கம்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்துறை சிறப்பு மருத்துவ சேவை தொடங்கப்படும்
கம்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்துறை சிறப்பு மருத்துவ சேவை தொடங்கப்படும் என்று மருத்துவ அலுவலர் தெரிவித்தார்;
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன. இதில் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பெண்களுக்கான மாதாந்திர பரிசோதனை, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களின் தேவைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பம் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்துறை சிறப்பு மருத்துவ சேவை மையம் (பாலிகிளினிக்) தொடங்கப்பட உள்ளது. இந்த தகவலை கம்பம் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தெரிவித்தார்.