ஈரோட்டில் தனியார் நிதி நிறுவனங்களில் பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது
ஈரோட்டில் தனியார் நிதி நிறுவனங்களில் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோட்டில் தனியார் நிதி நிறுவனங்களில் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பட்டதாரி வாலிபர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 32). எம்.சி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று தான், வேறு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளதாகவும், அந்த நகையை நீங்கள் மீட்டு தற்போது அதற்குண்டான பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
இதனை உண்மை என நம்பி அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தினர், பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று அவரது நகையை திருப்ப முயன்றபோது, அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பிரேம்குமார் பெயரில் எந்த ஒரு நகையும் அடமானம் வைக்கவில்லை என கூறினர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவனத்தினர், பிரேம்குமாரை தொடா்பு கொண்டபோது, அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
பண மோசடி
இதனால் பிரேம்குமார் தவறான தகவல்களை கூறி, பணம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தினர், இதுபற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் மோசடி செய்ய முயற்சி செய்து வருவதை அறிந்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரேம்குமார் ஏற்கனவே ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.மேலும், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.