ஈரோட்டில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஈரோட்டில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-05 21:40 GMT

ஈரோட்டில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இடப்பிரச்சினை

ஈரோடு அருகே உள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). மீன் பிடி தொழிலாளி. இவருடைய வீட்டிற்கு அருகில் இவரது உறவினர்களான முத்துபாண்டி என்கிற முத்துசாமி (85), இவருடைய மகன் மாதேஸ்வரன் (50) மற்றும் பேரன் சித்தீஸ் (28) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

கணேசனுக்கும், முத்துசாமி குடும்பத்தினருக்கும் இடையே 4 சென்ட் இடம் தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு குடிபோதையில் இருந்த கணேசன், முத்துசாமி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வெட்டி படுகொலை

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாகி முத்துசாமி கும்பல் அரிவாளால் கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகினர். இதில் கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

3 பேர் கைது

நேற்று முன்தினம் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மாதேஸ்வரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த முத்துசாமி, சித்தீஸ் ஆகிய 2 பேரையும் நேற்று வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இடத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும், குடிபோதையில் வந்து கணேசன் தகராறு செய்ததாலும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்