ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் குவிந்த பெண்கள்

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கொழுக்கட்டை செய்து, அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்்தினர்.;

Update: 2022-07-19 19:11 GMT

ஆரல்வாய்மொழி:

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கொழுக்கட்டை செய்து, அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்்தினர்.

அவ்வையார் அம்மன் கோவில்

ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும், தடங்கல்கள் விலகும் என்பது ஐதீகம்.

எனவே ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கோவில்களில் ஆடி மாத விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நேற்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை ஆகும். எனவே செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் நேற்று காலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

வழிபாடு

இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பெண்கள் திரளாக வந்து வழிபடுவார்கள். இங்கு வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அது கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதனால் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்து இருந்தனர். பின்னர் கோவில் வளாகத்திலும் அருகில் உள்ள தோப்புகளிலும் அவர்கள் கொண்டுவந்த பொருள்களை கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் தயார் செய்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாழக்குடி மற்றும் செண்பகராமன்புதூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நடுக்காட்டு இசக்கியம்மன்கோவில்

இதேபோல நாகர்கோவில் பால்பண்ணை அருகில் உள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால அலங்கார பூஜை நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நடுக்காட்டு இசக்கியம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முப்பந்தல்

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி செவ்வாயையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவில்களிலும் பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டனர். இதையொட்டி காலையில் இசக்கிஅம்மனுக்கு அபிஷேகமும் மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

இதேபோல முப்பந்தல் அருகே உள்ள ஆலமுடு அம்மன் கோவிலில் அடுத்த செவ்வாய்கிழமை நடைபெற உள்ள பூக்குழி கொடைவிழாவுக்கான கால்நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் அபிஷேகம், மதியம் தீபாராதனை, அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்