அம்மையநாயக்கனூரில்ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்:வாகன ஓட்டிகள் அவதி
அம்மையநாயக்கனூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அம்மையநாயக்கனூரில் ரெயில்வே சுரங்கபாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கபாதை வழியாக தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திண்டுக்கல், மதுரை மற்றும் கொடைரோடு ரெயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகள் கார், பஸ், மூலம் இந்த சுரங்கப்பாதை வழியாக சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைரோடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் அம்மையநாயக்கனூர் சுரங்க பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையே சுரங்கப்பாதை வழியாக சென்ற லாரியில் தண்ணீர் புகுந்து பழுதானது. இதையடுத்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பணியாளர்கள் வந்து தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் வைத்து வெளியே எடுத்து வருகின்றனர். அம்மையநாயக்கனூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.