அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில்சிறந்த காளை-வீரருக்கு கார் பரிசு
வருகிற 17-ந்தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரருக்கும், முதல் இடம் பிடிக்கும் காளைக்கும் கார் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.;
வருகிற 17-ந்தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரருக்கும், முதல் இடம் பிடிக்கும் காளைக்கும் கார் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
முகூர்த்தக்கால் நடும் விழா
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் கலெக்டர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான்ஷி நிகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறந்த வீரருக்கு கார் பரிசு
வழக்கம் போல இந்த ஆண்டும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ந் தேதி அரசு வழிகாட்டுதல்படி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பரிசுகளை வழங்குவார்.
இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயங்கள் வழங்கப்படும். சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படும்.
2-ம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும். மேலும் மாடு பிடிக்கும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயமும் வழங்கப்படும். பல்வேறு பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்படும். அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். காளைகளுக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காளைகள் பதிவு
இதை தொடர்ந்து அலங்காநல்லூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் காளைகள் பதிவு செய்யப்பட்டது. காளைகளுக்கான தகுதி சான்றிதழை அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டு வழங்கினார்.
கால்நடை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், கால்நடை உதவி மருத்துவர் விவேக்குமார், மெரில் ராஜ், மற்றும் மருத்துவ குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக முகூர்த்தக்கால் நடும் விழாவில், போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், தாசில்தார் வீரபத்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான் பானு, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர் ரகுபதி, கூட்டுறவு வங்கி தலைவர் முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.