தலைவாசல் அருகே ஆறகளூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
தலைவாசல் அருகே ஆறகளூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தலைவாசல்,
தலைவாசலை அடுத்த ஆறகளூர் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து காலை 11:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அதிர்வேட்டு முழங்க மேளதாளத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தேரோட்டத்தில் பாவாடை ராயன், வீரபத்திர சாமி உடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத்தையொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு,கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர்.
தேரோட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வீரகனூர், பெரிய ஏரி ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பெண் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன், பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆறகளூர் பருவதராஜகுல சமுதாய விழாக்குழுவினர் செய்திருந்தனர். இரவில்இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.