நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்த துணை தாசில்தார் பலி

கல்வராயன்மலை நீர் வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது தவறி விழுந்து துணை தாசில்தார் பலியானார்;

Update: 2022-06-26 17:33 GMT

கச்சிராயப்பாளையம்

துணை தாசில்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் சுந்தர்(வயது 35). திருமணமான இவருக்கு பிரியா(30) என்ற மனைவியும், 6 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வரும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுந்தர் அவரது நண்பர்களுடன் கல்வராயன்மலைக்கு சென்றார். அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள், மதியம் குளிப்பதற்காக கவியம் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுந்தர் அவரது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.

தீயணைப்பு வீரர்கள்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் கள்ளக்குறிச்சியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் இறங்கி நீரில் மூழ்கி பலியான சுந்தரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுந்தரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்