கொடுத்த பணத்தை கேட்டு வாலிபர் மீது தாக்குதல்; பெண் மீது வழக்கு
கொடுத்த பணத்தை கேட்டு வாலிபர் மீது தாக்குதல் நடத்திய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 33). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டமேடு பகுதிைய சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி ராஜேஸ்வரியிடம் தனது படிப்பு செலவிற்காக ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதில் பாதி தொகையை அவர் செலுத்தியுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டுக்கு சென்று ராஜேஸ்வரி தனக்கு தரவேண்டிய மீதி பணத்தை கேட்டு மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜேஸ்வரி மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.