தொழிலாளி மீது தாக்குதல்
திருமருகல் அருகே தொழிலாளியை தாக்கிய 2பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் ராஜரத்தினம் (வயது37). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மாதவராஜ், விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர்கள் அனைவரும் உறவினர்கள். ராஜரத்தினத்தின் ஆட்டை, மாதவராஜ் வளர்த்து வரும் நாய் கடித்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாதவராஜ், பாலமுருகன் ஆகியோர் மது போதையில் ராஜரத்தினம் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், ராஜரத்தினத்தை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாதவராஜ், பாலமுருகன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.