பெண் மீது தாக்குதல்; ஒருவர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அனுமார் புதுக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). இவர் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூர் பரமசிவன் மகன் சங்கரபாண்டி (34) என்பவரிடம் கடனாக ரூ.30 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக விஜயகுமார் பணத்தை திருப்பி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்கரபாண்டி தனது ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகேசன் (38) என்பருடன் அனுமார் புதுக்குளத்துக்கு வந்து விஜயகுமார் வீட்டில் இருந்த அவரது மனைவி செல்வியிடம் (42), கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு அவதூறாக பேசி உள்ளார். மேலும் செல்வியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வி மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தனர். சங்கரபாண்டியை தேடி வருகின்றனர்.