ஊழியர் மீது தாக்குதல்
கடனுக்கு பெட்ரோல் தர மறுத்ததால் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வலங்கைமான்:
வலங்கைமானை அடுத்த திருவோணமங்கலத்தில் பெட்ரோல் பங்கில் கீழ அமராவதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 24) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், சந்தோஷ் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெருங்குடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் மாதவன் (24), அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆல்ட்ரின் (24) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். சந்தோசிடம், கடனுக்கு பெட்ரோல் வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சந்தோசை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்ட்ரின் மற்றும் மாதவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர் . 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் பாராட்டினார்.