தீவனப்பயிர் தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவனப்பயிர் தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-29 18:07 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவனப்பயிர் தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில்முனைவோர் திட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. வடகிழக்கு மண்டலம் அமைப்பில் உள்ள 9 மாவட்டங்களிலிருந்து திருப்பத்தூர் உள்பட ஒரு பயனாயியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, தற்போது தீவனப் பயிர் அறுவடை எந்திரம், தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் எந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில் விவாசயிகளுக்கு வழங்கும் பொருட்டு தகுதியானோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட உபகரணங்களின் மொத்த விலை ரூ.42 லட்சமாகும். இதில் பயனாளியின் பங்குத்தொகை ரூ.31.5 லட்சம் போக, 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள். பால் பண்ணை உரிமையாளர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியவை பயனாளியாகும் பொருட்டு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்படி ஒரு வருடத்திற்கு 3,200 மெட்ரிக் டன் ஊறுகாய்புல் தயாரித்து விவசாயிகளுக்கு தேவையான பகுதியில் விற்பனை செய்வதோடு, தீவனப் பற்றாக்குறையை பெரிதும் குறைக்க சாதகமாவதோடு தீவனப் பயிர் தொழில் முனைவோராக விவசாயிகளை உருவாக்குவதற்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

எனவே, இத்திட்டம் தொடர்பாக தகுதியான நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி 12.10.2022-க்குள் விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு பயனடையலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்