கல்குவாரியில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 3 போலி நிருபர்கள் கைது

புளியங்குடி அருகே கல்குவாரியில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 3 போலி நிருபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-06-29 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே கல்குவாரியில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 3 போலி நிருபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

கல்குவாரி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் புளியங்குடி அருகே அரியூரில் அரசு அனுமதியுடன் கல்குவாரி நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் ஒரு காரில் வந்த 3 பேர் தங்களை பிரபல செய்தி நிறுவன நிருபர்கள் என்று கூறிக்கொண்டு, கல்குவாரிக்குள் நுைழந்து வீடியோ எடுத்தனர்.

இதுகுறித்து ஊழியர்கள், கல்குவாரி உரிமையாளர் பிரேம்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த பிரேம்குமார், அந்த நபர்களிடம் விசாரித்தார்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

உடனே அவர்கள் தங்களிடம் இருந்த அடையாள அட்டையை காண்பித்தனர். மேலும் அவர்கள், ''உங்களது கல்குவாரி பற்றிய புகார்கள் அதிகளவில் வந்துள்ளன. இதுபற்றி விசாரித்து வீடியோ பதிவு செய்ய வந்தோம். இதுபற்றிய செய்தியை வெளியிட வேண்டாம் எனில் ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் கல்குவாரி பற்றி ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்'' என்று கூறி மிரட்டினர்.

அதற்கு பிரேம்குமார், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என்னால் பணம் தர முடியாது" என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பித்து, பணம் தராவிட்டால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்று மிரட்டினர்.

3 போலி நிருபர்கள் கைது

உடனே பிரேம்குமார் தனது பணியாளர்கள் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடித்து புளியங்குடி போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த லோகநாதன் மகன் பிரபுராஜா (வயது 31), காசிராஜன் மகன் சவுந்தரபாண்டியன் (28), பேரையூர் தாலுகா ஏழுமலையைச் சேர்ந்த செல்லமுத்து மகன் வினோத்குமார் (38) என்பதும், போலி நிருபர்களான அவர்கள் கல்குவாரி உரிமையாளர் பிரேம்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரபுராஜா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மைக், போலி நிருபர் அடையாள அட்டை, கத்தி, செல்போன், விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

பரபரப்பு

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்குவாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் புளியங்குடி அருகே கல்குவாரி உரிமையாளரிடம் போலி நிருபர்கள் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்