அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்றதால் விவசாயிகள் கவலை
அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்று போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
தளி
வனப்பகுதியில் மழையில்லாததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்று போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு, பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய் பாசனப்பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நீர்வரத்து இல்லை
அதன் பேரில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் பாசன பரப்புகளில் நிலவுகின்ற தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் போராடி வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் உடுமலை சுற்றுப்புற பகுதியில் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. ஆனால் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்தும் இல்லை. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர் இருப்பும் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 56.40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1440 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.