இந்திய அளவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது;ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

இந்திய அளவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

Update: 2023-02-18 21:46 GMT

இந்திய அளவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நிவாரண தொகை

ஈரோடு பெரியசேமூர் கரட்டாங்காடு பகுதியில் தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோா் கலந்துகொண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கட்டிட தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், டிரைவர்கள் என யாருமே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகை வழங்க மறுத்து விட்டார்.

முதல் மாநிலம்

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். இதேபோல் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக ஏராளமான திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார்.

முதல்-அமைச்சர் இரவு, பகல் பாராமல் மக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவர் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இதனால் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து இந்திய அளவில் முதல் மாநிலமாக திகழ்கிறது.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்