நகர்ப்புற பகுதிகளை போல கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் - ராமதாஸ்

நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-12-10 08:17 GMT

சென்னை,

நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்.

நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்