'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடல்

‘மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

Update: 2022-12-09 09:25 GMT

'மாண்டஸ்' புயலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளையும், மரக்கிளைகளை அகற்ற தேவையான மர அறுவை எந்திரங்களையும், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த ஜே.சி.பி., டிப்பர் லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மழை பெய்யும்போது சுரங்கப்பாதைகளில் உடனடியாக மோட்டார் பம்புகளை இயக்கி மழைநீரை வெளியேற்றவும் மாநகராட்சியின் சார்பில் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றவும், அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து தேவைப்பட்டால் மக்களின் பாதுகாப்பு கருதி அவற்றை அகற்றவும், கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தகடுகள் போன்ற இலகுவான பொருட்களை கட்டி பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

கூட்டத்தில், 'மாண்டஸ்' புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழையும், காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். காற்றின் அதிக வேகத்தின் காரணமாக மரம் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்து விழக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியின் அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் 9-ந்தேதி (இன்று) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அவர் அறிவித்தார்.

எனவே, பொதுமக்கள் பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத்திடல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், 'மாண்டஸ்' புயலின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்