ஆரூத்ரா மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷ் கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு

ஆரூத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதிக்க கோரிய ஆர்.கே.சுரேஷ் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

Update: 2023-04-21 09:48 GMT

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர். இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறி போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராகும்படி நடிகரும் பா.ஜ.க. கட்சி நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தன்னை அணுகியதாகவும் அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் தன்னுடைய மனைவி, குழந்தைகளை கவனிப்பதற்காக தற்போது வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் ஆருத்ரா மோசடிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஆவணங்களுடன் ஆஜராகும் படி அனுப்பப்பட்டுள்ள அந்த சம்மனில் எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரம் இல்லாததால் சம்மனை ரத்து செய்யப்போவதாகவும் வேண்டும் என்றால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும் படியும் காவல் துறையிடம் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த காவல் துறை இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டாம் என்றும் சம்மன் குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல் துறை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததோடு ஆர்.கே.சுரேஷின் சம்மன் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்