ஆரூத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆரூத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2023-03-25 16:41 GMT

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆரூத்ரா என்கிற நிதி நிறுவனம் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 2400 கோடிக்கும் அதிகமாக பணம் வசூலித்து முறைகேடு நடைபெற்றிருக்கிறது. தற்போது அதில் முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து உரிய தண்டனை வழங்க ஏற்பாடு செய்வதோடு, சொத்துக்களை மீட்டு பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், மாநில காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

ஆரூத்ரா மற்றும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு நிதிமுறைகேடு செய்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனங்களில் உள்ள பாஜகவினர் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் உதவியோடும், வங்கி அதிகாரிகளின் உதவியோடும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு அத்தொகை மேற்கண்ட நிறுவனங்களில் மூலதனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மூலதனத்தையும் இழந்து வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் கையறு நிலையில் தவித்துக் கொண்டுள்ளனர். இத்தகைய பூதாகரமான மோசடிகளை மேற்கொள்வதற்கு பாஜகவினர் தங்களது அரசியல் செல்வாக்கை தெளிவாக பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டியும், அதற்கு முன்பாகவும் பல்வேறு சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்களும், மோசடிபேர்வழிகளும் பாஜகவில் இணைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஹரிஸ் என்பவரும் பாஜகவில் இணைந்து உடனேயே பாஜக மாநில விளையாட்டுப் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், தன்னோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல பாஜகவில் தான்பெற்ற பதவியை பயன்படுத்தியும், குற்றச்செயல்களில் ஹரிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நோக்கங்களுக்காகவே அவர் பாஜகவில் இணைந்ததாகவும், இதை தெரிந்தே பாஜக இவரை கட்சியில் இணைத்துக் கொண்டதாகவும் அதற்காக ஹரிஸ் அந்த கட்சிக்கு பல கோடி ரூபாய் பணம் உதவி செய்ததாகவும் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன.

பணமோசடி பேர்வழிகள் சமூக விரோத குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பாஜகவில் இணைவதும் இத்தகைய பேர்வழிகளை வழக்குகளிலிருந்து தப்புவிப்பதற்காக பாஜக அவர்களோடு பேரம் பேசி இணைத்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. சமீப காலங்களில் 8 கொலை, 11 கொலை முயற்சி 48 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படைப்பை குணா, 6 படுகொலைகள், 6 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வடசென்னை கல்வெட்டு ரவி, 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி சேலம் முரளி, கொலை உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கஞ்சா வியாபாரி புளியந்தோப்பு அஞ்சலை, ரவுடி சீர்காழி ஆனந்த் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும், கொலைக் குற்றவாளிகளும், சமூக விரோதிகளும், கஞ்சா பேர்வழிகளும், நிதி மோசடி பேர்வழிகளும் பாஜகவில் இணைந்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சதியாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி குற்றத்தில் சாதாரண ஏழை, எளிய மக்களிடம் ரூ. 2400 கோடி பணத்தை அபகரித்துக் கொண்ட கும்பலின் முக்கிய குற்றவாளியை தங்கள் கட்சியில் பாஜக இணைத்து பொறுப்பு வழங்கியது இதன் தொடர்ச்சியே தவிர தற்செயலான நிகழ்வல்ல.

எனவே, இப்பெரும் நிதிமோசடிகள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள இவ்வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும், மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு பாஜகவின் நிர்வாகிகளையும் விசாரிக்க வேண்டுமெனவும், குற்றவாளிகளை தப்புவிக்கவும், மோசடி பணத்தை அபகரிக்கவும் பாஜக நிர்வாகிகள் உதவியிருக்கிறார்களா? அதற்கு கைமாறு பெற்றிருக்கிறார்களா? அதற்காக அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி என்பதை பயன்படுத்தி சட்டத்தை வளைக்க நிர்ப்பந்தித்திருக்கிறார்களா? கைமாறாக என்ன பெற்றார்கள்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தோர் அனைவரையும் தண்டிக்க வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்