ஆக்கிரமிப்புகள் அகற்றம் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கோரிக்கை

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-09-07 17:08 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடலூர் ரோடு, இந்திரா நகரில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 66 கடைகள், வீடுகள் அகற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

விருத்தாசலம் நகராட்சி பகுதியில் ஏழை, எளிய மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த நிலையில், அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு குடியிருக்க சொந்த இடம் இல்லை. இப்பகுதி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு விருத்தாசலம் நகர பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்க வீட்டுமனை பட்டாவுடன் மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் பழனி மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், நகர செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் அருள்அழகன், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார், நகரமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அழகுப் பிரியா, நகர அவைத் தலைவர் தங்கராசு, நகர துணை செயலாளர் அரங்க.மணிவண்ணன், முக்தார் அலி, வட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்