ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Update: 2022-08-27 23:49 GMT

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஜெயலலிதா மரணம்

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்த அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதன்பின்னர் பல அரசியல் அதிரடிகள் தமிழக அரசியலில் அரங்கேறிய நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்

இதைத்தொடர்ந்துஅப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்.

இந்த ஆணையம் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 158 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 14 முறை ஆணையத்துக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றது.

608 பக்க அறிக்கை

இதன்பின்னர் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதில் தமிழ் அறிக்கை 608 பக்கங்களை கொண்டது. ஆங்கில அறிக்கை 500 பக்கங்கள் கொண்டது. இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்-அமைச்சரிடம் வழங்கினார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று மரணம் அடைந்தார். அவர் காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் 25.9.2017 அன்று விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.8.2022 அன்று முடிவுற்றது.

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி சந்தித்தார். அப்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

அமைச்சரவையில் விவாதம்

அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த அறிக்கையை 29-ந் தேதி (நாளை) நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி பேட்டி

இதைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி சென்னை கலசமகாலில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை பொறுத்தமட்டில் 2 கட்டங்களாக நடந்தன. அதாவது 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது?, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என இரு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது.

அரசுதான் முடிவு செய்யும்

சாட்சிகளின் வாக்குமூலங்களை உள்ளடக்கி 3 பாகங்களாக இந்த அறிக்கையை அளித்துள்ளோம்.

இந்த அறிக்கையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவதை பொறுத்தமட்டில் அரசுதான் முடிவு செய்யும். அறிக்கையை வெளியிடுவது சம்பந்தமாக ஆணையம் எதுவும் தெரிவிக்க முடியாது. என்னை பொறுத்தமட்டில் ஆணையத்தின் விசாரணை நிறைவாகவே இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மர்மம் உள்ளதா?

இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு நீதிபதி ஆறுமுகசாமி அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. உங்களது விசாரணையில் அதுபோன்ற மர்மங்கள் ஏதேனும் இருந்ததா? விசாரணை மூலம் அது கண்டறியப்பட்டதா?.

பதில்:- இதை அறிக்கையில்தான் கூற முடியும். அதன்படி, அறிக்கையில் கூறி உள்ளோம்.

கேள்வி:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டதா? அதுதொடர்பாக விசாரணையின்போது உறுதி செய்துள்ளீர்களா?.

பதில்:- எல்லாவற்றையும் அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளேன்.

எய்ம்ஸ் அறிக்கை வெளியானது எப்படி?

கேள்வி:- ஆணையம் யாரையாவது சந்தேகப்படுகிறதா?

பதில்:- அதுதான் அறிக்கையில் உள்ளது. விசாரணை அறிக்கை தொடர்பாக எந்த பதிலை சொன்னாலும் அது பொது வெளியில் சொல்வது போன்றதாகிவிடும்.

கேள்வி:- விசாரணை அறிக்கையை வெளியில் சொல்ல முடியாது என்கிறீர்கள். ஆனால், எய்ம்ஸ் மருத்து வர்கள் குழு ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளியாகி உள்ளதே?

பதில்:- அதை ஒருவர் (யார் என்பதை குறிப்பிடவில்லை) செய்கிறார். அவரால் முடிகிறது செய்கிறார். ஏதோ ஒரு விளம்பர யுக்திக்காக செய்கின்றனர். அதை நான் என்ன சொல்ல முடியும். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எய்ம்ஸ் டாக்டர்கள் 5 முறை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அதன்படி 5 அறிக்கைகளை கொடுத்தார்கள். அதுவும் ஜெயலலிதா இறந்து 3 மாதத்துக்கு பிறகு இந்த அறிக்கையை கொடுத்தார்கள். கடைசியாக வெளியானது 6-வது அறிக்கை. அவ்வளவுதான்.

பரிந்துரை செய்யவில்லை

கேள்வி:- விசாரணைக்கு அப்பல்லோ தரப்பில் எந்தளவு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது?

பதில்:- அப்பல்லோ தரப்பு, சசிகலா தரப்பு வக்கீல்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அப்பல்லோ டாக்டர்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள்.

கேள்வி:- இனிவரும் காலங்களில் முக்கிய தலைவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும்போது இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கருத்து ஏதேனும் தெரிவித்துள்ளீர்களா?

பதில்:- அதுபோன்று அரசுக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. ஜெயலலிதாவை பொறுத்தமட்டில் அவரை பார்த்துக்கொள்வதற்கென யாரும் இல்லாமல் போய்விட்டார்கள்.

வெளிநாட்டு சிகிச்சை

கேள்வி:- ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான முயற்சி மேற்கொள்ள வில்லையா? அதற்கான சூழல் எழவில்லையா?. இதுதொடர்பாக விசாரணையில் என்ன தெரியவந்தது?

பதில்:- நீங்கள் எதிர்பார்க்கின்ற அத்தனை விஷயங்களையும் அறிக்கையில் தெரிவித்துள்ளேன்.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம் இந்த அறிக்கையை தயாரிக்க எந்தளவுக்கு உபயோகமாக இருந்தது

பதில்:- நல்ல உபயோகமாக இருந்தது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை பொதுவெளியில் வெளியானதும் எனக்கு உபயோகமாக இருந்தது. அதில் இருந்துதான் எனக்கு நிறைய யோசனைகள் வந்தது.

சசிகலா வாக்குமூலம்

கேள்வி:- சசிகலா தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதில் இருந்ததா?

பதில்:- அதை வெளியில் சொன்னால் நன்றாக இருக்காது. அவர் கொடுத்த வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வது எங்களது பொறுப்பு. அதன்படி அதனை வாங்கி பரிசீலித்தோம்.

கேள்வி:- சசிகலா வாக்குமூலம் திருப்தியாக இருந்ததா?

பதில்:- உங்கள் சந்தேகங்களுக்கு அதில் பதில் உள்ளதா? இல்லையா?, ஏதேனும் விட்டு போய் உள்ளதா? குறை உள்ளதா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

அரசு தலையீடு இல்லை

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் உண்மையை கண்டறிவதில் ஏதேனும் தடை இருந்ததா?

பதில்:- அதுபோன்று எதுவும் இல்லை.

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது தலையீடு ஏதேனும் இருந்ததா?

பதில்:- எந்த தலையீடும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்