ஆறுமுகநேரியில் ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
ஆறுமுகநேரியில் ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் மடத்துவிளை பகுதியில் ரேஷன் கடை உள்ளது. ஆனால் சொந்த கட்டிடம் இல்லாமல் இருந்தது. மழை பெய்யும்போது கடை பாதிக்கும் நிலை இருந்தது. இதேபோல் ராஜமன்யபுரம் பகுதியில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனையொட்டி நகரப்பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று அமைச்சர், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி நிதியில் இருந்து மடத்துவிளைப்பகுதியில் ஒரு கட்டிடமும், ராஜமன்யபுரம் பகுதியில் ஒரு கட்டிடமும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கினார். அதனை தொடர்ந்து 2 ரேஷன் கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் அடிக்கல் நாட்டினார். நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.