சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாநாளை நடக்கிறது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நாளை நடக்கிறது.;
சிதம்பரம்,
ஆருத்ரா தரிசன விழா
கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.
ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
கொடியேற்றம்
அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.
இன்று தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனிடையே தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.