கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.
சென்னை,
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். நாளையே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.
இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறப்போகிறார்கள். மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. நாளை இந்த திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், முன்னதாக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் வகையில் சீரற்ற முறையில் (Random) சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றி பெற்றி நிலையில் அடுத்த கட்டமாக சீரற்ற முறையில் சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. நாளை திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு இந்த பணி முழுமையாக நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.