கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: சென்னையில் 3 நாட்களில் 2 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சென்னையில் 3 நாட்களில் 2 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தில் தகுதி உள்ள பெண்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வீடுகள்தோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சென்னையில் 1,730 முகாம்கள் நடைபெறுகின்றன. சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் முகாம்களை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சென்னையில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரத்து 572 பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 1,050 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.