சென்னை எழும்பூர் சிப்காட் அலுவலகத்தில் கலைஞர் புகைப்பட மாடம்
சென்னை எழும்பூர் சிப்காட் அலுவலகத்தில் கலைஞர் புகைப்பட மாடத்தை அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 1969-ல் முதல் முறையாக பொறுப்பேற்ற கருணாநிதி, தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்து, 1971-ல் சிப்காட் நிறுவனத்தை உருவாக்கினார்.
கருணாநிதி தொடங்கி வைத்த சிப்காட்டின் சகாப்தம் இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்து, 16 மாவட்டங்களில், 28 தொழில் வளாகங்கள், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என 38 ஆயிரத்து 538 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி இட்ட சிப்காட் எனும் இந்த சிறுவிதை இன்று 3 ஆயிரத்து 142 தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை வென்று சுமார் ரூ.1.62 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை ஈர்த்து சுமார் 7.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்கி ஆலமரமாக வளர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
உலகின் முன்னனி நிறுவனங்களான ஹூண்டாய், கேட்டர் பில்லர், செயிண்ட் கோபைன் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கம் அளித்த கருணாநிதி, ஸ்பிக், அசோக் லேலாண்ட், டைட்டான் போன்ற இந்திய நிறுவனங்கள் உலகளாவிய அளவில் ஏற்றுமதி செய்வற்கான உற்பத்தி வசதி வாய்ப்புகளையும் சிப்காட் வளாகங்கள் மூலம் உருவாக்கினார்.
தகவல் தொழில்நுட்ப பூங்கா
இதுதவிர, சர்வதேசத்தரத்துடன் கருணாநிதி உருவாக்கிய சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா இன்று பல அயல்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
அவர்தம் வழியில் தற்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் இந்த தொழில் வீச்சை மேலும் மெருகேற்றி நவீன தேவைக்கு ஏற்ப கட்டமைத்து வருகிறார். அதன்படி, சிப்காட் தனது பயணத்தில் பல மைல்கற்களை உருவாக்கி வருகிறது.
கலைஞர் புகைப்பட மாடம்
இந்த நிலையில், கருணாநிதியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பங்கேற்ற விழாக்கள் மற்றும் தொழில்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய தொகுப்புகளின் புகைப்படங்களை கொண்ட புகைப்பட மாடத்தை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டனர். அதன் பின்னர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தொழில் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் எ.சுந்தரவல்லி, டிட்கோ மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீமுரளிதரன், சிப்காட் செயல் இயக்குனர் பி.ஆகாஷ், டிட்கோ செயல் இயக்குனர் ஜெயசந்திர பானு ரெட்டி மற்றும் சிப்காட் நிறுவன உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.