விண்வெளித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது : சந்திரயான்-3 திட்ட இயக்குனர்

தோல்விகளை மைல் கற்களாக்கி கடினமாக உழைத்தால் தான் 100 சதவீத வெற்றியை பெற முடியும் என்று சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.

Update: 2024-01-21 00:33 GMT

விருதுநகர்,

விருதுநகரில் 'காபி வித் கலெக்டர்' 60-வது அமர்வு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு கூறியதாவது:-

கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வம்மிக்க மாணவர்களை அவர்களுக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும், அவர்களுக்கு சமூகத்தோடு இணைந்து உயர்வதற்கான வாய்ப்புகள் குறித்து பேசுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் 'காபி வித் கலெக்டர்'. 60-வது நிகழ்ச்சியை சிறந்த ஒரு ஆளுமையோடு ஒரு ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டுதலுக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட போது, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலை பார்க்க வேண்டும், அவருடைய உரையாடல்கள், சந்திரயான்-3 திட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை அழைக்க வேண்டும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவரை அழைத்தோம். அவர் மகிழ்ச்சியுடன் வருகிறேன் என்றார்.

இதுவரை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் விண்வெளியில் ஆர்வமாக இருக்கின்றனர். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் அடைய போகக்கூடிய உயரம் என்பது நீங்கள் எதை தீர்மானிக்கிறீர்களோ அதுதான். அதை உங்களுக்கு சொல்வதற்கும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்கும் தான் இந்த நிகழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறியதாவது:-

சந்திரயான்-3 விண்கலன் திட்டத்திற்காக ஆரம்பம் முதல் இறுதி கட்டம் வரை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அந்த தடைகளில் இருந்து பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்டோம். சந்திரயான்-3 செயல்திட்டத்தில் இருந்த அறிவியல் சவால்களை எதிர்கொண்டோம். விண்வெளித்துறையில் கணிதமும், இயற்பியலும் எவ்வளவு முக்கிய இடம் பெறுகிறது என்பதை அறிய முடிந்தது. விண்வெளித்துறையில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும். தோல்விகளை மைல் கற்களாக்கி கடினமாக உழைத்தால் தான் 100 சதவீத வெற்றியை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்