அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலைத்திருவிழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

எப்போதும்வென்றான் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலைத்திருவிழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

Update: 2023-10-13 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் எப்போதும்வென்றான் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா விழா போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென வந்தார். அங்கு நடைபெற்று கொண்டிருந்த கலை திருவிழா போட்டிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் திறமைகளை வெளி கொண்டுவரும் பொருட்டு கலையரசன், கலையரசி விருதுகளுக்கான கலை திருவிழா நடத்தப்படுகிறது. மாணவ மாணவிகள் இதில் ஆர்வமுடன் பங்கேற்று நீங்கள் விருதுகளை பெற வேண்டும். கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். அப்போது விரைவில் பள்ளிக்கு சுற்றுப்புற சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். கடந்த கல்வியாண்டில் நடந்த பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை பாராட்டினார். தொடர்ந்து ஆசிரியர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்