முத்தாலம்மன் கோவிலில் கலை விழா தொடக்கம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவிலில் கலை விழா தொடங்கியது. இதில் மும்மதத்தினரும் பங்கேற்றனர்.

Update: 2023-10-06 18:51 GMT

வத்திராயிருப்பில் உள்ள முத்தாலம்மன் கோவில் தேரோட்ட கலை விழா மும்மதத்தினர் பங்கேற்புடன் தொடங்கியது. முன்னதாக கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஸ்ரீதரன், மதுரை மாவட்ட கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை லாரன்ஸ், டாக்டர் முகமது ஷகீல், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட சிறப்பு விருந்தினர்கள் கிராம சாவடியில் அமர வைக்கப்பட்டு கிராம மக்களால் மரியாதை செய்யப்பட்டனர்.

பின்னர் அனைவரும் ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கலை விழா தொடங்கியது. விழாவிற்கு கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஸ்ரீதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஊர் "வற்றா இருப்பு" என்ற பெயருக்கு ஏற்ப நீர்வளம், நிலவளம் அனைத்தும் வற்றாமல் உள்ளது. அதேபோல மக்கள் மனங்களிலும் அன்பு வற்றாமல் உள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த திருவிழா என்றார்.

மதுரை மாவட்ட கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,இந்த விழா ஒரு சாதாரண வழிபாட்டு விழாவாக அல்லாமல் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்கிற விழாவாக நடப்பது மிகவும் போற்றுதலுக்குரியது. இதுபோன்ற விழாக்கள் மூலம் நாடு முழுவதும் மத நல்லிணக்கத்தை எளிதாக ஏற்படுத்திவிடலாம் என்றார்.டாக்டர் முகமது ஷகீல் பேசுகையில், இது வெறும் ஒரு கோவில் திருவிழாவாக அல்லாமல் மக்கள் மனங்களை இணைக்கிற ஒரு விழாவாக நடைபெறுவது மிகவும் பாராட்டத்தக்கது என்றார். வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேசுகையில்,

இந்த பகுதியில் மக்கள் ஒன்றிணைந்து இருப்பதால் காவல்துறையினரின் பணி எளிதாக்கப்படுகிறது. இவ்விழா இங்கு மட்டுமன்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்றார். முன்னதாக பக்த சபா செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். முடிவில் பக்த சபா தலைவர் சுந்தர்ராஜபெருமாள் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்