சதுரகிரி வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது
சதுரகிரியில் 2 நாட்களாக காட்டுத்தீ எரிந்த நிலையில், வனப்பகுதியில் தீ வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
வத்திராயிருப்பு,
சதுரகிரியில் 2 நாட்களாக காட்டுத்தீ எரிந்த நிலையில், வனப்பகுதியில் தீ வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனப்பகுதியில் தீ
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சதுரகிரியில் சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென காட்டுத்தீ பற்றியது. சதுரகிரி மலையை ஒட்டிய பகுதி வரை தீ பரவியது.
வனச்சரகர்கள் செல்லமணி, பிரபாகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து 2 நாட்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வனப்பகுதியில் ஒருவர் தீவைத்ததால்தான் காட்டுத்தீ உருவானதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
அதன்பேரில் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் காலனியை சேர்ந்த யானை கருப்பன் (வயது 53) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் தற்காலிக கடை வைக்க அனுமதி வழங்குவதில்லை. மலைவாழ் மக்கள் மாடு மேய்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மலைக்கு சென்று தேன், சாம்பிராணி உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கவும் தடை விதித்துள்ளனர். இந்த ஆத்திரத்தில்தான் வனப்பகுதியில் தீ பற்ற வைத்ததாக விசாரணையின்போது, யானை கருப்பன் கூறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
அதே நேரத்தில் மாடு மேய்க்க காய்ந்த புற்கள்தான் இருப்பதாகவும், எனவே வனப்பகுதியில் தீவைத்து காய்ந்த புற்களை அழித்துவிட்டால் பசும்புற்கள் முளைக்கும் என்று தீ வைத்துவிட்டேன் என யானை கருப்பன் கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவரிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலைப்பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.