கோவில்களில் அம்புபோடும் நிகழ்ச்சி
ிக்கல், வாய்மேடு, வேதாரண்யம் பகுதிகளில் உள்ள கோவில்களில் அம்புபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
சிக்கல்:
சிக்கல், வாய்மேடு, வேதாரண்யம் பகுதிகளில் உள்ள கோவில்களில் அம்புபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிங்கார வேலவர்
சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமியை முன்னிட்டு சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சிங்காரவேலவர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலில் இருந்து சிங்காரவேலவர், கோலவாமனப் பெருமாள் புறப்பட்டு தேரடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமியை முன்னிட்டு கோவிலில் இருந்து பாலசுப்பிரமணியர் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பட்டு திருவாரூர்-நாகை மெயின் ரோட்டில் உள்ள பிள்ளை திருவாசல் விநாயகர் கோவில் அருகே அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமசாமி பெருமாள்
வாய்மேட்டை அடுத்த பஞ்ச நதிக்குளம் மேற்கு ஊராட்சியில் அமைந்துள்ளது ராமசாமி பெருமாள் கோவில். இக்கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தினந்தோறும் சாமி வீதியுலா காட்சியும், தாயார் திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான பெருமாள் வீதி உலா மற்றும் அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் சாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான அம்புபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுந்தரமூர்த்தி சாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலாவாக சென்று தோப்புத்துறை ரெயில்வே கேட் அருகே அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.