தோட்டாக்களுடன் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

தோட்டாக்களுடன் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது;

Update: 2023-07-22 18:45 GMT

கோவை

கோவை விமான நிலையத்துக்கு தோட்டாக்களுடன் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் கோவை, திருப்பூரில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை பார்த்துவிட்டு செல்வதற்காக உறவினர்கள் இங்கு வருவது உண்டு.

ராஜஸ்தான் மாநிலம் சாரு பகுதியை சேர்ந்தவர் சியாம்சிங் (வயது 42), அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய சகோதரர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

விமான நிலையம் வந்தார்

எனவே சியாம்சிங் தனது தம்பியை பார்ப்பதற்காக கடந்த மாதம் ராஜஸ்தானில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். பின்னர் அவர் திருப்பூர் சென்று தனது தம்பியை பார்த்துவிட்டு அவருடன் சில நாட்கள் தங்கி இருந்தார். தொடர்ந்து அவர் தனது சொந்த மாநிலத்துக்கு செல்ல புறப்பட்டார்.

அதன்படி சியாம்சிங் கோவையில் இருந்து ராஜஸ்தானுக்கு செல்லும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இந்த விமானம் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்பதால் நேற்று முன்தினம் பிற்பகல் 12.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

பைக்குள் தோட்டாக்கள்

பின்னர் உள்ளே சென்றபோது அவர் கொண்டு வந்த பையை அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் துணிகள் மட்டும் இருந்தன. அவை ஒவ்வொன்றையும் வெளியே எடுத்து வைத்தபோது பையின் அடிப்பகுதியில் துப்பாக்கியில் பயன்படுத்தும் 2 தோட்டாக்கள் இருந்தன.

உடனே போலீசார் அந்த தோட்டாக்களை கைப்பற்றியதுடன், சியாம்சிங்கை தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், இந்த தோட்டாக்கள் எப்படி எனது பைக்குள் வந்தது என்பது தெரியவில்லை, நான் துப்பாக்கியும் பயன்படுத்தவது இல்லை என்று கூறினார்.

போலீசார் விசாரணை

இருந்தபோதிலும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விமான நிலையத்துக்கு சென்று சியாம் சிங்கை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போதும், அவர் நான் கடந்த மாதம் விமானத்தில் கோவை வந்தேன். நான் கொண்டு வந்த பையில் துணிகளை தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்துச்செல்லவில்லை. ஆனால் இந்த தோட்டாக்கள் எப்படி பைக்குள் வந்தது என்பது தெரியவில்லை என்று கூறினார்.

கைது செய்தனர்

இதையடுத்து போலீசார் சியாம்சிங்கை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 2 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்